ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம்.

ஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது.

அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

DSCF5320

போராட்டத்திற்காக உயிர்கள் முதல் உடமைகள் வரை இழந்த காயங்களையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருக்கும் குசேலன்மலையில் வாழும் குழந்தைகளின் கல்வி நிலமை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி குழந்தைகள் போசாக்கின்மையால் உடல்உள வளர்ச்சியிலும் போதிய முன்னேற்றமின்றியே காணப்படுகின்றனர்.
இந்தக் கிராமத்தை உலகின் கண்களுக்கு அறிய வைத்து இந்த மக்களினதும் குழந்தைகளினதும் வாழ்வில் மாற்றமொன்றை உருவாக்கும் நோக்கில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் கல்விக்குழுவின் இளைஞர்கள் முயற்சியை மேற்கொண்டனர்.

DSCF5317
குசேலன்மலையின் ஏழ்மையையும் அந்தக் கிராமத்தின் கல்வியையும் மேம்படுத்தும் முகமாக ஆதரவென்று கேட்டதும் இல்லையென்று சொல்லாமல் எப்போதும் தனது நேசக்கரத்தை நீட்டும் அமெரிக்காவில் வாழும் தவேந்திரராசா ஐயா அவர்கள் இக்கிராமத்தின் கல்வி வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாதாந்த உதவியை வழங்க முன்வந்து முதல் கட்டம் ஆனி மாதத்துக்கான பண உதவியையும் தந்துதவியுள்ளார்.
08.06.2013 அன்று எமது உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் அமைப்பின் தலைவர் ஜோ.ரோசந்த் பொருளாளர் பு.தனுசன் உப செயலாளர் ச.ரத்திக்கா நேசக்கரம் அமைப்பின் உபசெயலாளர் சே.ஜோன்சன் பிராந்திய கல்வி இணைப்பாளர் மற்றும்  அரவணைப்பு அமைப்பின் உபதலைவர்  தா. அருணா  கரடியன்குளம் ப்புக்க அபிவிருத்தி சங்க தலைவர் விக்கி ஆகியோரும் 48 சிறார்களும்  கலந்து கொண்டனர்.

DSCF5315

வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை மாலை எமது அமைப்பின் பணியாளர்கள் குசேலன் மலைக்குச் சென்று பிள்ளைகளுடன் ஞாயிறு மாலைவரை தங்கியிருந்து உளவள மனவள ஆரோக்கியத்தை முன்னேற்றலும் எழுத்தறிவையும் சிறந்த கல்வியையும் வழங்கும் முயற்சியையும் ஆரம்பித்துள்ளனர்.
தொடர்ந்து கற்கைநெறியில் ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கிலும் பிள்ளைகளின் வரவை அதிகரிக்கவும் முதற்கட்டம் பிள்ளைகளுக்கு சித்திரம் கீறல் விளையாட்டு ஆகியவற்றையே அறிமுகப்படுத்தியுள்ளோம்.

முதல் 3மாதங்களுக்கும் சித்திரம் வரைதல் விளையாட்டிலேயே பிள்ளைகளின் சிந்தனை ஒருங்கிணைக்கப்பட்டு படிப்படியாக கல்வியூட்டல் ஆரம்பிக்கப்படும்.

கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கான சிற்றூண்டி உணவு வகைகளும் வழங்கி குசேலன்மலையின் குழந்தைகளை சிறந்த கல்விமான்களாக உருவாக்கும் கனவோடு இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

பிள்ளைகள் நிலத்தில் மர நிழலில் இருந்தே எமது கற்பித்தலில் பங்கேற்றுள்ளார்கள். கதிரை மேசைகளோ அல்லது கட்டிட வசதியோ எதுவுமில்லாத நிலமையில் உள்ள கிராமத்தின் இதர மாற்றங்களுக்கான ஆதரவினை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் உரிமையுடன் வெண்டி நிற்கிறோம்.

DSCF5314
தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறிய அளவிலான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆயினும் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கக்கூடிய கட்டிட வசதிகளோ அல்லது மின்சார வசதிகளோ இதுவரை இக்கிராமத்தில் இல்லை.

கல்வி இல்லையேல் எங்களுக்கு வாழ்வில்லை. என்ற உண்மையைப் புரிந்து ஒவ்வொரு தமிழரும் இத்தகைய கிராமங்களின் கல்வி ,வாழ்வாதார , சுகாதார மேம்பாட்டில் தங்கள் நேசக்கரத்தை நீட்டுமாறு வேண்டுகிறோம்.

எமது முதல் கட்ட வேண்டுதலுக்கு தனது ஆதரவைத் தந்து அடுத்தடுத்த முன்னேற்றங்களிலும் தனது உதவியை வழங்க முன்வந்த தவேந்திரராசா ஐயாவிற்கு குசேலன்மலை குழந்தைகள், பெற்றோர்கள் , நேசக்கரம் பிறைட் பியூச்சர் பணியாளர்கள் , அரவணைப்புக் குழுவினர் அனைவரும் நன்றியுடனிருப்போம். கடவுள் உங்கள் போன்ற கருணையாளர்களின் வடிவிலேயே மனிதர்களிடம் வருகிறார்கள் என்பதற்கு மதிப்பிற்கினிய திரு.தவேந்திரராசா ஐயா உங்கள் போன்றவர்களே நல்லுதாரணம்.
என்றும் நன்றிகள்.

குழந்தைகளின் சித்திரம் வரைதல் ஒளிப்பதிவு :-

படங்கள் :-