மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள்.

மட்டக்களப்பு நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 46கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமமே கோப்பாவெளி எனப்படும் நீர்வளத்தைக் கொண்ட கிராமம் ஆகும். மொத்தம் 114 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் 105 குடும்பங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் 25 விதவைகளும் அவர்களது பிள்ளைகளும் உட்பட 52 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலையும் மீதி  குடும்பங்கள் விறகு வெட்டுதல் , மாடுமேய்த்தல் என சில தொழில்களைச் செய்து வருகின்றனர். போரால் பாதிப்புற்ற கிராமங்களில் இக்கிராமமும் மிகவும் பாதிப்படைந்த ஒரு கிராமம். இந்த மக்களிடம் பணம் வசதிகள் எதுவுமில்லை.

DSCF5375

ஆயினும் அன்றாட வாழ்வை கொண்டு செல்ல தங்களது உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக் கொண்டு கடும் உழைப்பாழிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது உழைப்பை பணக்காரர்கள் சுரண்டிக் கொண்டு போவதே அதிகம் நடைபெறுகிறது.

விரால்மீன், செல்வன் அல்லது திலாப்பியா மீன் இரண்டுமே இப்பகுதியின் சிறப்பு. மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களுக்குச் சொந்தமான வலையை முஸ்லீம் பணக்காரர்கள் கடனாக வழங்குகிறார்கள். வழங்கப்படும் வலைக்கான பணத்தையும் அறவிட்டு அவர்கள் பிடித்துவரும் மீனையும் வலையை வழங்கும் முஸ்லீம்களே கொள்வனவு செய்கிறார்கள்.

DSCF5382

சந்தையில் 300ரூபாவுக்கு விற்கும் மீனை இந்த மீனவர்களிடம்  கிலோ 80ரூபா தொடக்கம் 100ரூபாவுக்குள் முஸ்லீம் முதலாளிகள் கொள்வனவு செய்கிறார்கள். தண்ணீரில் போராடி தரமற்ற வலைகளோடு கடினப்பட்டுப் பிடித்துவரும் மீனையும் குறைந்த விலைக்கு கொடுத்துவிட்;டுப் போகிற நிலமையே இவர்களுக்கு அன்றாடம் ஆகிவிடுகிறது.

நகர்ப்புறத்துப் பணக்காரர்கள் இந்தக் கிராமத்து ஏழைகளிடம் தங்களது மாடுகளைப் பராமரிக்கக் கொடுப்பார்கள். அதன் பயன்கள் பணக்காரர்களுக்கு போக குறைந்த நாட்கூலியை மட்டும் இக்குடும்பங்கள் பெற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்ல வேண்டிய பிள்ளைகள் மாடுகளை மேய்க்கவும் பராமரிக்கவும் போய்விடுகிறார்கள்.

கல்வியறிவு மிகவும் மட்டமான இக்கிராமத்தில் ஒரேயொரு ஆரம்பக்கல்வி கற்கும் பாடசாலையிருக்கிறது. குடும்ப வறுமையால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதே மிகவும் அரிது. அன்றாட உணவுக்கு வழிதேடுவதே இக்கிராமத்து குழந்தைகளுக்கும் பொதுவான தேடலாக இருக்கிறது.

DSCF5363

யானைகளின் தொல்லையால் அடிக்கடி இந்த ஊரில் மரணங்களும் யானையின் தாக்கத்தால் ஆபத்துக்களும் அதிகம் காணப்படுகிறது. 2கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவரும் பிள்ளைகளுக்கு போக்குவரத்துக் கூட பயங்கரம் மிக்கதாகும். அண்மைக்காலங்களாக இந்தக் கிராமத்தில் யானைகளின் தொல்லையால் எற்பட்ட இழப்புக்கள் பற்றி ஊடகங்களிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

இக்கிராமத்தில் மீன்பிடித்தொழில் செய்யும் 52 குடும்பங்களுக்கும் தேவையான வலையை எமது நிறுவனம் மூலம் வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம். தலா ஒரு குடும்பத்திற்கு ஒரு வலையும் மீன்களை பத்திரப்படுத்தி கொண்டுவர பெட்டியும் வழங்க 15ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது.

52 குடும்பங்களுக்கும் 15000 x  52 = 780000.00ரூபா (அண்ணளவாக 4800€)
இக்குடும்பங்களிலிருந்து 25 குடும்பங்களுக்கு முதலில் வலைகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.
15000 x 25 = 37500.00ரூபா (அண்ணளவாக 2345€)

இவர்கள் பிடித்து வரும் மீன்களை நாங்களே நியாயவிலையில் கொள்வனவு செய்து விற்பனைச் சந்தையை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பையும் ஏற்கிறோம். இதன் மூலம் அவர்களது உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தை வழங்குவதோடு மேலும் பல நன்மைகளையும் அக்கிராமத்திற்கு செய்யக்கூடிய வருமானத்தையும் இந்த மீன் வியாபாரம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

DSCF5373

கிராம முன்னேற்றம் பிள்ளைகளின் கல்வியூக்குவிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளவும் இதர முன்னேற்றங்களைச் செய்யவும் இக்கிராமத்திலிருந்து கிடைக்கும் வளங்கள் மூலமே வருமானத்தைப் பெறக்கூடிய நிலமையை உருவாக்குவதால் இக்கிராமம் குறித்தகால இடைவெளியில் தன்னிறைவடையக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

வியாபாரம் செய்யும் மீன் வருமானத்திலிருந்து கிடைக்கும் இலாபத்திலிருந்து இலவசமாக வழங்கப்படும் வலைகளுக்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு பகுதி இலாபத்தை வழங்க முடியும்.

வலைகளை இலவசமாகப் பெறுகிற குடும்பங்களும் சுயபொருளாதாரத்தில் முன்னேறுகிற சம நேரத்தில் அவர்களுக்கு உதவுவோரும் பயனடையலாம். இத்திட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து இதுபோன்ற மீன்பிடித் தொழில் செய்யும் அயல் கிராமங்களையும் இத்திட்டத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கருவாடு உற்பத்தியையும் இத்தோடு ஊக்குவிக்கவுள்ளோம். புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தனிப்பட்டவர்களின் தேவைகளுக்கான கருவாடுகளையும் ஏற்றுமதி செய்து கொடுக்கக்கூடிய வாய்ப்பையும் மேற்கொள்ளலாம்.
இதுவொரு நீண்டகாலத் திட்டமாக மேற்கொள்ளக்கூடியதாகும். இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Shanthy – Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

Email :- nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8